வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்த 54 பேருக்கு கொரோனா!!

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் 25 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. தற்போது வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த பலர், பல்வேறு மாவட்டங்களில் புதிதாக பாதிக்கப்படுகின்றனர். சென்னையில் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வைரஸ் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா வைரசால் தமிழகத்தில் புதிதாக 688 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 448 ஆக அதிகரித்து உள்ளது.

புதியதாக பாதிக்கப்பட்டவர்களில் துபாயில் இருந்து வந்த 23 பேரும், மாலத்தீவில் இருந்து வந்த ஒருவரும், துபாய், மலேசியா, குவைத் ஆகிய நாடுகளில் இருந்து வந்து 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வீடு திரும்ப இருந்த 13 பேரும், மராட்டியத்தில் இருந்து வந்த 49 பேரும், கேரளாவில் இருந்து வந்த ஒருவரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 3 முதியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்து உள்ளது. 489 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறி உள்ளனர். இதுவரை 4 ஆயிரத்து 895 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர்.

நேற்று 19 மாவட்டங்களில் புதிதாக நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதிகப்பட்சமாக சென்னையில் 552 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். செங்கல்பட்டில் 22 பேரும், நெல்லையில் 20 பேரும், கள்ளக்குறிச்சியில் 11 பேரும், திருவள்ளூரில் 8 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கரூர், தூத்துக்குடியில் தலா 6 பேரும், காஞ்சீபுரம், கன்னியாகுமரியில் தலா 5 பேரும், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேரும், ராமநாதபுரம், கடலூர், தென்காசியில் தலா 2 பேரும், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, தேனி, திருச்சி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும், விமான நிலைய முகாமில் 36 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுவரை தமிழகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வந்த 54 பேருக்கும், விமான நிலைய முகாம்களில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, வீடு திரும்ப இருந்த 18 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்று 12 வயதுக்கு உட்பட்ட 38 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 63 முதியவர்களும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.