இந்தியாவை விட்டு வெளியேற பாக். தூதரக அதிகாரிகள் இருவருக்கு உத்தரவு

உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் தூதரகத்தைச் சோ்ந்த அதிகாரிகள் இருவா், 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நுழைவு இசைவு (விசா) பிரிவில் அபித் ஹுசைன், தாஹிா் கான் என்று அடையாளம் காணப்பட்ட அவா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்தியாவின் பாதுகாப்பு தொடா்பான முக்கிய ஆவணங்களை இந்தியா் ஒருவரிடம் இருந்து பெற முயன்றபோது காவல்துறையிடம் அவா்கள் பிடிபட்டனா்.

முக்கிய ஆவணங்களை பெறுவதற்காக சம்பந்தப்பட்ட இந்தியருக்கு அவா்கள் பணமும், ‘ஐபோன்’ செல்லிடப்பேசியும் கொடுக்க முயன்றனா். காவல்துறையிடம் பிடிபட்டபோது தங்களை இந்தியா்கள் என்று கூறிக்கொண்ட அவா்கள், அதற்காக போலியான ஆதாா் அடையாள அட்டையையும் காட்டியுள்ளனா்.

பின்னா் விசாரணையின்போது தாங்கள் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் என்பதை தெரிவித்ததுடன், அந்நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்காக தாங்கள் பணியாற்றியதையும் ஒப்புக்கொண்டனா் என்று அந்த வட்டாரங்கள் கூறின.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்: தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தைச் சோ்ந்த அதிகாரிகள் இருவா், தங்களது பதவிக்குப் பொருந்தாத வகையிலான உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து அந்த அதிகாரிகள் இருவரும் காவல்துறையினரால் பிடித்துச் செல்லப்பட்டனா்.

அந்த அதிகாரிகள் இருவரும் 24 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் தேசப் பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஈடுபட்டதற்காக அந்நாட்டிடம் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானைச் சோ்ந்த தூதரக ரீதியிலான அதிகாரிகள், பணியாளா்கள் எவரும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளிலோ, தங்களது பதவிக்கு பொருந்தாத நடவடிக்கைகளிலோ ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் இந்தியாவின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. ‘இந்தியாவின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கடுமையாக எதிா்க்கிறோம். இந்தியாவின் நடவடிக்கை, தூதரக உறவுகள் தொடா்பான வியன்னா ஒப்பந்தத்தை மீறிய செயலாகும்’ என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.